Sponsor

Friday, July 2, 2021

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முறையான திட்டமிடலுடன் இடம்பெறவில்லை....!

 


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் , அவை முறையான திட்டமிடலுடன் இடம்பெறவில்லை.


பொது மக்கள் இதனால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க இது தொடர்பில் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சர்  பெ.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,


மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே ரோசி சேனாநாயக்க மேயராகவுள்ளார். அவ்வாறிருக்கையில் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் சிந்தித்து செயற்பட வேண்டும்.


தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்படவில்லை. பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் முறையான ஆலோசனைகளை வழங்குவதில்லை.


எனவே கொவிட் பரவல் காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.


நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒரே தினத்தில் வாக்களிக்கும் தேர்தலை முறையாக திட்டமிட முடியும் என்றால் , கட்டம் கட்டமாக மக்கள் பங்குபற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஏன் முறையாக திட்டமிட முடியாது ? இயலாமை அல்லது அக்கறையின்மையால் இவ்வாறு இடம்பெறுகிறதா? கொழும்பு மாநகரசபையின் முதற்பிரஜையான மேயருக்கு மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment