Sponsor

Sunday, February 28, 2021

தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு!

 


தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றன. இதை 10 கட்சிகளின் கூட்டு என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால், அந்த 10 கட்சிகளும் எவையெவை?

இதில், கஜேந்திரகுமாரின் கட்சி இதுவரையிலும் இணையவில்லை. கடைசியாக வவுனியாவில் நடந்த சந்திப்பில் விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த பிரதானிகளைக் காணவில்லை. ஆனால், அவருடைய கட்சிக் கூட்டுக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் காணப்பட்டார்கள். அவர்களிலும் அனந்தி வரவில்லை.

இவ்வாறு ஒரு கூட்டை உருவாக்குவதற்கான முதல் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதன்பின்னர், வவுனியாவில் ஒரு சந்திப்பு. அதில் மதத் தலைவர்களையும் இணைத்துக் கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. வவுனியாவில் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் வழமையாகக் காணப்படும் கத்தோலிக்க மற்றும் இந்து ஆதீனத் தலைவர்களோடு சேர்த்து இம்முறை வித்தியாசமாக தென்னிந்தியத் திருச்சபையின் ஆயரும் பங்கு பற்றியிருக்கிறார். அவர் பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் காணப்படுவதில்லை. அவர் சுமந்திரனுக்கு நெருக்கம் என்ற ஒரு அவதானிப்பு உண்டு. அவருடைய சட்ட விவகாரங்களை சுமந்திரனே கவனிப்பதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

இக்கூட்டினை மாவை சேனாதிராஜா முன்னின்று உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரோடு சிவஞானமும் இதில் சேர்ந்து செயற்படுகிறார். எனினும், இப்படியொரு கூட்டை உருவாக்குவதற்குச் சம்பந்தருக்கு விருப்பமில்லை என்று கருதப்படுகிறது. சம்பந்தருக்கு மட்டுமல்லாது சுமந்திரனுக்கும் விருப்பம் இல்லை என்றே கருதப்படுகிறது.

ஏனெனில், சுமந்திரனை நியாயப்படுத்தி ஒரு கொழும்புப் பத்திரிகையில் எழுதிவரும் பத்தி எழுத்தாளர் இக்கூட்டினை கேவலமாக விமர்சித்து எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாது இக்கூட்டின் பின்னணியில் இந்தியாவே இருக்கலாம் என்ற ஊகத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படி ஒரு கூட்டு உருவாகுவதை சுமந்திரன் விரும்பமாட்டார் என்பது தர்க்க பூர்வமானது. ஏனெனில், கடந்த பொதுத் தேர்தலின் பின் தமிழரசுக் கட்சி இரண்டாக உடைந்து கிடக்கிறது. பிளவை வெளிப்படையாக காட்டினால் தஅது கட்சியை மேலும் பலவீனப்படுத்தி முடிவில் எல்லாரையும் தோற்கடித்து விடும் என்று இரண்டு அணிகளும் அஞ்சுகின்றன. அதனால் ஒருவர் மற்றவரை அனுசரித்துப் போகிறார்கள்.

மேலும், சுமந்திரனுக்கு எதிராக ஒரு புதிய கூட்டுத் தலைமை தாங்க மாவை தயாரில்லை. அதற்கு வேண்டிய திராணியும் அவருக்கு இல்லை. தலைமைத்துவப் பண்பும் இல்லை. இது சுமந்திரனுக்கு வசதியானது. அவர் என்ன செய்கிறார் என்றால் மாவையின் எல்லா முயற்சிகளுக்குள்ளும் தானும் தலையை ஓட்டுகிறார். இதன்மூலம் மாவை தனியோட்டம் ஓடுவதைத் தடுக்கப் பார்க்கிறார். தனக்கு எதிராக மாவை உருவாக்கிய கூட்டுக்குள்ளேயே சுமந்திரனும் போய்க் குந்திக் கொண்டிருக்கிறார். இது அணைத்துக் கெடுத்தல்?

இந்த விடயத்தில் மட்டுமல்லாது கஜேந்திரகுமாரின் விடயத்திலும் விக்னேஸ்வரனின் விடயத்திலும்கூட சுமந்திரன் கடந்த சில மாதங்களாக அதிகம் விட்டுக்கொடுத்து நடக்கிறார். திடீரென்று அவர் தமிழ் தேசிய வேடம் பூண்டுவிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட அதிரடிப்படை மெய்க்காவலரை அரசாங்கம் விலக்கியமை அவருக்கு புனிதநீர் தெளித்தது போலாகிவிட்டது.

தோல்விகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்ட ஓர் அரசியல்வாதியாக அவர் தன்னை நிரூபித்து வருகிறார். தன்னை விமர்சித்த தரப்புக்களோடு இணைந்து செயற்படுகிறார். மன்னாரில் முன்பு தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த சிவகரன் சுமந்திரனைக் கடுமையாக விமர்சித்தவர்.

கட்சிக்குள் வழிப்போக்கர் என்று அவரை அழைத்தார். வழிப்போக்கர்களின் அரசியலால்தான் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் கடுமையாக தோல்வி கண்டது என்றும் சிவகரன் விமர்சித்திருக்கிறார். ஆனால், நினைவு கூருதலுக்கான வழக்குகளில் சுமந்திரன் சிவகரனோடு நெருங்கி விட்டார். இப்படித் தன்னை ஒருகாலத்தில் எதிர்த்த பலரையும் அவர் நண்பர்களாக்கி வருகிறார்.

அது நல்ல விடயம். இறந்த காலத்திலிருந்து பாடம் கற்கத் தயாராக இருப்பது என்பது தலைமைத்துவத்தின் முக்கியமான இயல்புகளில் ஒன்று. ஆனால், இங்கே பிரச்சினை என்னவென்றால், இறந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு என்ன காரணம் என்பது தான். அந்த அடிப்படையான காரணங்கள் குறித்து தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்போ தன்னை சுய விசாரணை செய்து கொண்டதா?

அவ்வாறு, கூட்டமைப்பு தன்னை சுய விசாரணை செய்துகொள்ளாத ஒரு பின்னணியில் கடந்த சில மாதங்களாக அக்கட்சி முன்னெடுத்துவரும் எல்லா சுதாகரிப்பு முயற்சிகளையும் அடுத்த தேர்தலை நோக்கிய தந்திரங்களாகவே பார்க்க வேண்டியிருக்கும்.

அப்படியொரு விசாரணைக்குத் தேவையான ஒரு பொறிமுறையை கட்சி இதுவரையிலும் உருவாக்கி இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தில்தான் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒரு அணி சுமந்திரனுக்கு எதிராகத் திரட்சியுற்றது. ஆனால், இந்த அணிக்குள் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்தலில் தோற்றவர்கள். இதுவே, அந்த அணியின் பலவீனம். எதிரணியில் இருப்பவர்கள் தேர்தலில் வென்றவர்கள். அதுவே அந்த அணியின் பலம்.

எனினும், மாவையின் முயற்சிகளை சுமந்திரன் மிகவும் தந்திரமாகக் கையாண்டு வருகிறார். மாவை முன்னெடுக்கும் எல்லா புதிய முயற்சிகளிலும் அவரும் தலையிடுகிறார் அதன்மூலம் மாவை தனித்து ஓடமுடியாது ஒரு நிலைமையை அவர் ஏற்படுத்துகிறார். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் ஒரு புதிய கூட்டை அவர்கள் உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணியில் இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. தமிழ் தேசியப் பேரவை என்ற பெயர் 2013ஆம் ஆண்டு மன்னாரில் அப்பொழுது ஆயராக இருந்த ராயப்பு ஜோசப் அடிகளாரின் தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட ஒன்று. அதைப் பின்னர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் சிறிய மாற்றத்தோடு பயன்படுத்தினார்கள். இப்பொழுது அந்தப் பெயரை புதிய அணி தத்தெடுக்கப் பார்க்கிறது.

இதன்மூலம், தமிழ் அரசியலில் புதிய இரத்தச் சுற்றோட்டம் ஏற்பட்டால் நல்லதுதான். ஆனால், இந்தக் கூட்டுக்குள் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள்தான். அதிலும், கஜேந்திரகுமாரையும் விக்னேஷ்வரனையும் காணவில்லை. ஐங்கரநேசனையும் அனந்தியையும் காணவில்லை.

இது ஜெனிவா கூட்டத்தொடர் காலம். இப்படியொரு காலகட்டத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைவது ஒரு நல்ல சகுனமே. இப்பொழுது விலகி நிற்பவர்களையும் இணைத்துக்கொண்டு ஒரு முழு அளவிலான கூட்டை உருவாக்கினால் அது மேலும் நல்லது. அவ்வாறு உருவாகிய கூட்டு வெளியுறவுக் கொள்கை பொறுத்து ஒரு பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கி ஜெனிவாவை எதிர்கொண்டால் அது மிகமிக நல்லது.

இம்முறை, ஜெனிவாக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்துக்குரிய பூச்சிய வரைவு வெளிவந்திருக்கிறது. அது ஏற்கனவே மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத ஒரு முதல் வரைவு. அதுமட்டுமல்லாது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட ஸ்ரீலங்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலான அறிக்கையின் அடிப்படைகள் பலவற்றை இந்த முதல் வரைவு பிரதிபலிக்கவில்லை.

எனவே, ஏற்கெனவே ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்த மூன்று கட்சிகளும் இணைந்து புதிய தீர்மானம் குறித்து முடிவெடுக்க இருக்கும் உறுப்பு நாடுகளோடு உடனடியாகப் பேச வேண்டும். ஜெனிவாவை நோக்கி ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்தது போல பூச்சிய வரைபைக் குறித்தும் ஒரு பொது அதிருப்தியை, கோரிக்கையை முன்வைக்க வேண்டும். ஆனால், இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அப்படி ஒரு பொதுக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.

கடந்த மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் ஒன்றாக நின்று ஒரு பொதுக் கோரிக்கையை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியது போல பூச்சிய விரைபு தொடர்பாகவும் ஒரு பொதுக்கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இதுவிடயத்தில் சிவில் சமூகங்களையும் அதிகளவில் இணைத்துக்கொள்ள வேண்டும். செய்வார்களா?

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் எனப்படுவது முன்னைய கூட்டத் தொடர்களில் இருந்து ஒரு விடயத்தில் மிகத் துலக்கமாக வேறுபடுகிறது. அது என்னவெனில், கடந்த பத்தாண்டு கால ஜெனிவா அணுகுமுறைகளின் விளைவாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை தீவில் உள்ள மோதலில் ஈடுபட்ட இரண்டு பெரிய சமூகங்களும் நிராகரித்துவிட்டன.

30/1 தீர்மானம் எனப்படுவது பொறுப்புக் கூறலுக்கானது. பொறுப்புக்கூறல் எனப்படுவது ஜெனிவாவைப் பொறுத்தவரை பிரயோக நிலையில் நிலைமாறுகால நீதிதான். கடந்த ஆறு ஆண்டுகால நிலைமாறுகால நீதி செய்முறைகள் தோற்றுவிட்டன. இதுவிடயத்தில் முன்னைய அரசாங்கத்தோடு சேர்ந்து செயற்பட்ட கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரன் அதை ஒப்புக்கொள்கிறார்.

ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம் அதில் தோல்வி கண்டுவிட்டோம் என்று அவர் கூறுகிறார். அதனால்தான், கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டபடி பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்பதை கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டது. விக்னேஸ்வரனும் ஒப்புக்கொண்டார். அதன் விளைவே மூன்று கட்சிகள் சேர்ந்து அனுப்பிய ஆவணம்.

எனவே, நிலைமாறுகால நீதியை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பெருமளவுக்கு நிராகரிக்கின்றன. அதேசமயம், ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிராகவே சிங்கள மக்கள் ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் மிகத் துலக்கமான ஆணையை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் ஆற்றிய உரையில் அது தெளிவாகத் தெரிகிறது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத் தொடர்களின் விளைவாக உருவாகிய ஒரு தீர்மானத்தை அதன் சாராம்சமாகக் காணப்படும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை தீவிலுள்ள இரண்டு பெரிய இனங்களும் உடன்படாத ஒரு சூழ்நிலையில்தான் கடந்த கிழமை 46ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட இரண்டு மக்கள் கூட்டங்களாலும் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு தீர்மானம் குறித்து இம்முறை கூட்டத்தொடரில் முடிவெடுக்க வேண்டும். பூச்சிய வரைபை வைத்துப் பார்த்தால் இம்முறை நிலைமாறுகால நீதியிலிருந்து முற்றிலுமாக விலகிச்செல்லும் ஒரு தீர்மானத்துக்கு இடமில்லை என்றே தெரிகிறது.

தமிழ் தரப்பு கேட்பதுபோல், பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகக்கூடிய நிலைமையும் இல்லை. சிங்களத் தரப்பு கேட்பதைப் போல பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரமாகக் குறுக்கும் ஒரு நிலைமையும் இல்லை. இரண்டுக்கும் இடையேதான் ஒரு தீர்மானம் வருமா?

 

No comments:

Post a Comment