Sponsor

Thursday, March 11, 2021

வவுனியாவில் சிவராத்திரி நிகழ்வில் சிவன் கோவிலில் அர்த்தமற்ற பாதுகாப்பு நடவடிக்கையால் அவதியுறும் பக்தர்கள்!



 சைவர்களின் விசேட தினமான சிவராத்திரி தினமாகிய இன்று வவுனியாவில் இருக்கும் பிரபல சிவன் ஆலயமான அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் (கோவில்குளம் சிவன் கோவில்) ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் செல்லும் மக்களை பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முற்றிலும் அர்த்தமற்ற போலியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

ஆலயத்திற்கு வருகைதரும் மக்களை வீதியிலே நிரையாக நிற்கச் செய்து உடல் வெப்பத்தை அறியும் கருவி மூலமாக அவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதித்து 15 முதல்20 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 தொடக்கம் 10 பக்தர்களை ஆலயத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

ஆலய வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும் மக்கள் அனைவரையும் வீதியிலே மிக நெருக்கமாக ஒன்று கூட செய்து அதன் மூலம் வீதி விபத்துக்கள் உட்பட கொரோனா தொற்று யாருக்கேனும் இருக்குமாயின் அது பரவுவதற்கான ஏற்பாடுகளை இவர்களே செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வீதியில் நிற்கின்ற அனைத்து பக்தர்களையும் இன்று ஆலயத்திற்குள் அனுமதிக்கப் போகிறார்கள் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் யாரும் திரும்பி வருவதை அவதானிக்க முடியவில்லை எவ்வாறாயினும் பெரும்பாலான பக்தர்கள் விடியும்வரை ஆலயத்திற்கு உள்ளேயே நிற்கவும் போகின்றார்கள் இந்த நிலையில் இந்த 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை 10 பக்தர்களை உள்ளே அனுப்புவதன் மூலம் எவ்வாறான ஒரு பாதுகாப்பு நடைமுறையை இவர்கள் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவுள்ளது.

ஆலயத்திற்குள் செல்பவர்களை உடல் வெப்பத்தை அறியும் கருவி மூலம் பரிசோதிக்கும் இவர்கள் ஆலயத்திற்கு வெளியே எந்தவித பரிசோதனையும் இல்லாமல் வீதியில் மக்களை கூட்டமாகவும் நிற்க வைத்து அதனால் ஏற்படுகின்ற நெருக்கத்தால் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்யப்போகிறார்கள்? இவர்களது இந்த அர்த்தமற்ற பாதுகாப்பு நடவடிக்கையானது ஏதோ நாங்களும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான நடைமுறைகளை பின்பற்றுகின்றோம் என பெயரளவில் காட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இவர்களின் இந்த செயற்பாட்டினால் விசனம் அடைந்த பல பக்தர்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரமாக வீதியிலே காத்திருக்க முடியாமல் வீடு திரும்புவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment