Sponsor

Thursday, February 18, 2021

நாட்டு மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கே ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை நிறுவியுள்ளார் – சரத் வீரசேகர



 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தரகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அமைச்சை நிறுவியுள்ளதாகவும் பாதாள குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டின் அபிவிருத்திக்கு துணைநிற்கும் இளைஞர் சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையானால் நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது. அதிகமான போதைப்பொருள் கடத்தல் கடல் வழியாகவே இடமபெறுகிறது. இதுபோன்ற கடல்வழி மூலமான கடத்தல்களை அடையாளம் காண இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் குழுக்களை அமைத்து போதைப்பொருளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் சுமார் 31,000 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும்அவர்களில் சுமார் 11000 பேர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்காலத்தில் அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பாக 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாகவும் கப்பம் பெறுவது தொடர்பாக 118 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்பு கொண்டு பொது மக்களால் தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment