Sponsor

Friday, May 7, 2021

கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேட வேண்டுகோள்



 கர்ப்பம் தரித்து 28 வாரங்கள் கடந்த கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அது அபாய நிலையாகும். இவ்வாறானவர்கள் சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் கர்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலம் அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று காசல்வீதி மகளிர் வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார். மேலும் இலங்கையில் தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகின்ற 80 சதவீதமான கர்பிணிகளுக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படுவதில்லை.

கர்ப்பம் தரித்து முதல் 28 வாரங்களுக்குள் உள்ளடங்கும் கர்பிணிகளுக்கு இதன் பாதிப்பு குறைவு என்ற போதிலும் , 28 வாரங்களைக் கடந்தவர்களுக்கு பாதிப்புக்கள் அதிகமாகும். எனவே கர்ப்பிணிகள் இயன்றளவு சனகூட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர்களின் சங்க அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , இலங்கையில் வருடாந்தம் சுமார் 3 இலட்சத்து 31 ஆயிரம் தாய்மார் கர்ப்பம் தரிக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு சுமார் 1,000 கர்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி முழுமையாக குணமடைந்துள்ளனர். கர்ப்பம் தரித்து முதல் 28 வாரங்களுக்குள் கொவிட் தொற்றுக்குள்ளான கர்பிணிகளில் 80 வீதமானோருக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் காணப்படவில்லை.

பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. எஞ்சியோருக்கு இருமல், தடிமன், நிமோனியா நோய் ஏற்படல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறு நிமோனியா நிலைமை ஏற்படுவது அபாய நிலையாகும். நூற்றுக்கு 5 சதவீதமான கர்பிணிகளுக்கு நிமோனியா நிலைமை ஏற்படுகிறது.

கர்ப்பம் தரித்து முதல் 28 வாரங்களைக் கடந்துள்ள கர்பிணிகளுக்கு இந்நிலைமை பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் முதல் 28 வாரங்களுக்குள் உள்ள கர்பிணிகளின் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் வீதம் குறைவாகும். இரண்டாவது 28 வாரங்களுக்குள் உள்ளடங்குபவர்களில் பாதிப்பு அதிகரிக்கக் கூடும்.

எனவே கர்ப்பம் தரித்து முதல் 28 வாரங்களைக் கடந்துள்ள கர்பிணிகள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறு 28 வாரங்கள் நிறைவடைந்துள்ள கர்பிணிகள் அபாயம் கூடிய கட்டத்திலுள்ளோர் , குறைந்த கட்டத்திலுள்ளோம் என இரு கட்டங்களாகப் வகுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இதில் அபாயம் குறைவான கட்டத்தில் உள்ளடங்குபவர்களுக்கு தொற்றிலிருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால் கூடுதல் அபாய கட்டத்திலுள்ளவர்கள் , உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் , நீரிழிவு உள்ளிட்ட நோயுடையவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்புக்கள் அதிகமாகும்.

இவ்வாறானவர்களுக்கு ஆரம்பத்திலேயே சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல் என்பவற்றோடு தொற்று தீவிரமடைந்தால் நிமோனியா நிலையும் ஏற்படக் கூடும்.

இவ்வாறானவர்கள் தாமதிக்காது வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

ஏனையோரும் ஏதேனுமொரு வித்தியாசமான அறிகுறி காணப்பட்டால் கூட பிரதேச மருத்துவ அதிகாரிகளை நாடி சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் இயன்றளவில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு , கர்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்குவது அவர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாகக் காணப்படும் என்று நாம் பரிந்துரைக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment